சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
லைட் ஹவுஸ் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – (சிறுசேரி) சிப்காட் இடையே மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், நந்தனம், புரசைவாக்கம், ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மாதவரம் – (சிறுசேரி) சிப்காட் வழித்தடத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரையிலான 1.3 கி.மீ. தூரத்திற்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.
இதற்காக அடையாறு ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி டணல் போரிங் எந்திரங்கள் மூலம் இன்று முதல் துவங்குகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 10 மீட்டர் தூரம் சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து 100 நாட்களில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் மீது சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் இருப்பதால் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள் உதவியுடன் சுமார் 120 அடி ஆழத்திற்கு துளையிட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது.
கடல் களிமண் மற்றும் பாறைகள் மட்டுமே இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்ததை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டது இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த பணி தாமதமானது.