சென்னை:

டிடிவி தினகரனின் அமமுக வெளியிட்டுள்ள கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் புகழேந்தி பெயர் விடுபட்டுள்ள நிலையில்,  அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது, அமுமுக  கட்சியே என்னுடையது என பெங்களூர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான பெங்களூரு புகழேந்தி, அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்து வந்தார். ஜெ. மறைவுக்குப் பிறகு, தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அவருடைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தார்.

சமீப காலமாக டிடிவிக்கும்,  புகழேந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்த டிடிவி தினகரன், சமீபத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே அமமுக வின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, அமமுக செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து நான் நீக்கப்பட்டதாக எனக்கு தகவல் வரவில்லை என்று கூறியவர்,  நான் பாஜகவுக்கு செல்வதாக கூறுவதும் தவறு என்று மறுத்தார்.

மேலும், அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்றவர், அந்தக் கட்சியே என்னுடையதுதான் என்றவர்,  அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன், யாரையும் நம்பி நான் இல்லை.

இவ்வாறு புகழேந்தி கூறினார். புகழேந்தியின் பேச்சு அமமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.