சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு மும்மூர்த்தி எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் திடீரென சந்தித்து நலம் விசாரித்தனர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரை பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் நேற்று இரவு கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போது டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அவர்கள் நேற்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி, முதுபெரும் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் கருணாநிதியை சந்தித்தோம். எங்களை பார்த்த உடன் அவேர் கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார் என்றார்.
மேலும், இச்சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமே. இதில் அரசியல் எதுவுமில்லை.கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் விரைவில் ஒலிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம் என்றனர்.
இந்த 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்திருக்கிற நிலையில், தற்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.