சென்னை,

சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக சசிகலாவின் உறவினருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.

சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் அவர்களின் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

சசிகலாவின் அக்காள் மகள் சீதளதேவி. இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது.

வருமானத்திற்கு அதிகமாக அவர்கள்  ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிஐ, 1997ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. அதையடுத்து அந்த வழக்கில் 1999ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர்  2000ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 2001ம் ஆண்டில் சிபிஐ சாட்சிகள் விசாரணையை தொடங்கி கடந்த 2008ம் ஆண்டு,

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகை ரூ.20 லட்சத்தை கட்டத் தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் உறவினர் எஸ்.ஆர்.பாஸ்கரன், அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம்  உறுதி செய்தது.