சென்னை,

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுக (புரட்சி தலைவி அம்மா ) அணியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

10ந்தேதி நடைபெற இருக்கும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், டிடிவியின் புதிய நிர்வாகிகள் குறித்த நேற்றைய அறிவிப்பு குறித்தும்  ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஓபிஎஸ், தனது அணி  மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு வரச்சொல்லி நேற்று முன்தினம் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து  அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் நிர்வாகிகள் சென்னை வந்திருந்தனர்.

அவர்களுடன் தற்போது அதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர்  பன்னீர் செல்வம் தலைமையில், சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினையான  குடிநீர் பிரச்சனை, நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட வைகள் குறித்து, எடப்பாடி அரசுக்கு எதிராக, வரும் 10ம் தேதி நடைபெற இருக்கும்  கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

டிடிவி நேற்று அறிவித்துள்ள நிர்வாகிகளில் பலர் ஓபிஎஸ் அணியிலும், எடப்பாடி அணியிலும் இருப்பதால், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.‘

டிடிவி தினகரனின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, கட்சிகளுக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்தும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூட்டத்தில்  விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனது   அணியை பலப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்த கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில்,மாவட்ட நிர்வாகிகளுடன்  மதுசூதனன், கே.பி. முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.