சென்னை,

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக கமல் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை அவமதித்ததாக கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு வகையான எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற எல்லையை மீறி தமிழக கலாச்சாரத்துக்கும், பாரம் பரியத்துக்கும் எதிராக உள்ளதாக விமர்சனம் எழுந்து உள்ளது.

இந்நிலையில்,  ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி யில் பெண் நடிகைகள் ஆபாச உடையணிந்து வருவதால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியவில்லை. அடித்தட்டு மக்களை அவமதிக்கும் வகை யில் பேசுகின்றனர். அடிக்கடி இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.

எனவே அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பாக நடிகர்கள் கமல்ஹாசன், சக்தி, விஜய் டிவி மற்றும் எண்டமோல் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

அதில், ‘நாதஸ்வரத்தை தெய்வீக இசைக் கருவியாக இசை வேளாளர்கள் பாவிக்கின்றனர். கடந்த ஜூலை 14-ம் தேதி ஒளிபரப்பப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை நடிகர் சக்தி ஆணவத்துடன் கையாண்டார்.

புனிதமான அந்த இசைக் கருவியை, சாப்பிடும் மேஜை மீது அவமதிக்கும் வகையில் போட்டிருந்தார்.

இந்த செயலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் 7 தினங்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.