டில்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முனைந்ததாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 17ஆம் தேதி தெற்கு டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திர சேகர் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் இருந்து பணத்தை பெற்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலருக்கு லஞ்சமாக கொடுக்க திட்டமிட்டிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தினர். அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று நான்காவது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகரும் டிடிவி தினகரனும் ஒரே அறையில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
விசாரணையின் முடிவில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று டிடிவி தினகரன் டெல்லி நிதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் டிடிவிதினகரனுக்கு அவ்வளவு ஜாமீன் கிடைப்பது சிரமம் என்றும் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.