பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுடன்,  டிடிவி தினகரனுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் 5 எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினார்.

அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக டிடிவிக்கு ஆதரவாக 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளிவந்துள்ள  டி.டி.வி.தினகரன், சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்று கூறினார். இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

ஏற்கனவே இரு அணிகளாக இருந்த அதிமுக, தற்போது 3 அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தியதைதொடர்ந்து, அமைச்சர்கள் யாரும் டி.டி.வி.தினகரனை சந்திக்க மாட்டோம் என்று ஜெயக்குமார் அதிரடியாக கூறினார்.

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்பட 43 எம்எல்ஏக்கள்   தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு அதிகரித்தது.

இதனிடையே, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை, தினகரன் இன்று சந்தித்துள்ளார். அவருடன் சசிகலா குடும்பத்தினர் சிலரும் சந்தித்ததாக கூறப்படுகிறது.

திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள தினகரன், சசிகலாவைச் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

மேலும், அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையும் சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்த பிற்பகல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பழனியப்பன், கென்னடி, முருகன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் சசிகலாவைச் சந்தித்து பேசியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் பலர் சசிகலாவை சந்தித்திருப்பது எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக டிடிவி தினகரன் வட்டார செய்திகள் கூறுகின்றன.