திருமலை: நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கக்கூடிய பிரம்மோற்சவத்தில் மூலவர் தரிசனம், வாகன சேவையை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
அதற்காக பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பிரம்மோற்சவ ஊக்கத் தொகையாக பகுமானம் என்ற பெயரில் அதிகபட்சமாக ரூ1000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 1990ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட இந்த தொகை பின்னர் 2018ம் ஆண்டு நிரந்தர ஊழியர்களுக்கு ரூ13,500 ஆகவும், ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ6,500 எனவும் வழங்கப்பட்டது.
நடப்பாண்டில் ஊரடங்கு காரணமாக ஊக்கத்தொகையாக வழங்க ரூ20.5 கோடி தேவைப்படுகிறது. தற்போது கொரோனாவால் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.