நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
19 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் சுனாமி..
பேரலையால் உயிரிழந்த லட்சக்கணக்கானோருக்கு இன்று நினைவஞ்சலி..
மறக்கவே முடியாத டிசம்பர் 26, 2004.
காஞ்சியில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் முதன்முறையாக போலீசார் முன்பு ஆஜர் ஆக இருந்தார் காஞ்சி சங்கர மடத்து விஜயேந்திரர்.. அவரின் வருகைக்காக இப்போது டிஐஜி அலுவலகமாக இருக்கும் காட்டு பங்களா முன்பு சன்டிவிக்காக செய்தி சேகரிக்க காலையிலேயே திரண்டு விட்டிருந்தோம்.. அப்போதுதான் பேரிடியாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன..
“சென்னையில் கடல் புகுந்துவிட்டது.. வேளாங்கண்ணியை கடல் அழித்துவிட்டது. கன்னியாகுமரியை கடல் காவு வாங்கிவிட்டது” என நம்ப முடியாத தகவல்கள்..
ஆரம்பத்தில் ஒன்றுமே புரியவில்லை பின்னர்தான் மூத்த செய்தியாளர் ஒருவர் அது சுனாமி என்று சொல்லி விளக்கினார்.
இந்த ரகளையிலும் சங்கர மடத்து பக்தர் ஒருவர் சொன்னார் பாருங்கள், “பெரியவர் ஜெயேந்திரரை கைது செய்யும் போது எதுவுமே நடக்கவில்லை. ஆனால் சிறியவரை விசாரணைக்கு அழைத்த உடனே கடலே பொங்கி விட்டது” என்று. தலையிலடித்துக் கொண்டு சுனாமி தாக்கிய கல்பாக்கத்திற்கு அதிரடியாக கிளம்பி ஓடினோம்.. சுனாமியின் கோரமுகத்தை அங்குதான் காண முடிந்தது..
கல்பாக்கத்தை நெருங்க நெருங்க ஏராளமான கார்கள் அடித்து வெளியே விழுந்து கிடப்பதை பார்க்கும்போதே அடி வயிறு கலக்குது. கல்பாக்கம் பக்கம் போனாலும் ஆங்காங்கே ………. வாழ்நாளில் என்றென்றைக்கும் மறக்கவே முடியாத காட்சிகள் அவை.
பின்னர் சங்கர் ராமன் கொலை வழக்கு மேட்டரை கைவிட்டு விட்டு சன் டிவி எடிட்டோரியலுக்கு திரும்பி சுனாமி தொடர்பான செய்திகளை தினமும் எழுத எழுத..
அதிலும் சன் டிவி செய்தியாளர்கள் (அண்மையில் மறைந்த) நாகப்பட்டினம் ஜான் கென்னடி, கடலூர் தேவநாதன், நாகர்கோவில் பரமேஸ்வரன், கன்னியாகுமரி ஐயப்பன், திருவட்டாறு பீட்டர் ஜெரால்டு, தூத்துக்குடி வசீகரன், நெல்லை ராமலிங்கம், கோவில்பட்டி கோமதி சங்கர், தென்காசி முத்துவேல் போன்றோர் இரவு பகல் பாராமல் களப்பணியில் ஈடுபட்டு நெஞ்சை கனகனக்கச் செய்யும் வீடியோக்களையும் தகவல்களையும் அனுப்ப அனுப்ப.. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு உச்சகட்ட துக்கம்தான் ஆட்டிப்படைத்தது.
அந்தமானை சுனாமி வேட்டையாடி ஏராளமான உயிர்களை காவு வாங்கி நீண்ட நேரம் கழித்த பிறகே தமிழக கடலோரங்களை தாக்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மட்டும் அப்போது சிறப்பாக செயல்பட்டு இருந்தால் தமிழகத்தில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோயிருக்காது. நம்மை விட பேரழிவை சந்தித்த இலங்கையில் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனரை உடனடியாக டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்று நினைவு…