திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட நடவடிக்கை!

Must read

சென்னை: திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சுமார் 9 ஆண்டுகளுக்கு தற்போது நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. தன்னாட்சி பெற்ற இந்த நிறுவனம், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பெரும் முயற்சியால் சென்னையில் கடந்த  2008 மே 19 முதல்  இயங்கிவருகிறது

முன்னதாக 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகம் அறியச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் முழு நேர இயக்குனர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அதையடுத்து, 13 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு (202)  பிப்ரவரியில் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கொரோனா பரவியதால், அதன் பணிகள் முடங்கிய நிலையில், ஏற்கனவே பணிகள் நடைபெற்று வந்த  திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதி காரம் உள்ளிட்ட 12 தமிழ்இலக்கியங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடும் நடவடிக்கைகளும் முடங்கின.

இந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனம்மூலம் திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் தனி திட்டத்தை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி இருந்தது.

இவற்றில், பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தி, மலையாளம், உருது, சம்ஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, அரபி, நரிக்குறவர் மொழியான வாக்ரி போலி ஆகியவற்றில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

மத்திய அரசின் செம்மொழி மீதான நூல்கள் அமேசானின் அச்சு மற்றும் கிண்டில் பதிப்புகளாகவும் வெளியிடப்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article