முதன் முறையாக முகக்கவசம் அணிந்த  ட்ரம்ப்..

கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது.

உலகிலேயே அந்த நாட்டில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வந்தார்.

பொது நிகழ்ச்சிகளில் தன்னை சுற்றியுள்ள அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தாலும், இவர் மட்டும் முகக்கவசம் அணியாமல் போஸ் கொடுப்பதும், பேட்டி அளிப்பதுமாக இருந்தார்.

வைரஸ் பரவாமல் தடுக்க  பொதுமக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்து வெளியே வரும்போது, ட்ரம்ப் மட்டும் முகக்கவசம் அணியாமல் இருப்பது விமர்சனத்துக்கு ஆளானது.

இந்த நிலையில் ட்ரம்ப், வாஷிங்டனில்  வால்டர் ரீட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு நேற்று சென்றிருந்தார்.

பல்வேறு சம்பவங்களில் காயம் அடைந்து அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களைப் பார்க்க வந்திருந்த ட்ரம்ப், கறுப்பு நிற முகக்கவசம் அணிந்திருந்தார்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ட்ரம்ப், முகக்கவசம் அணிந்து பொது வெளியில் தோன்றியது இதுவே முதன்முறையாகும்.

இதனை அங்குக் குழுமி இருந்த செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பார்த்து வியந்து போனார்கள்.

முன்னதாக மருத்துவமனைக்குப் புறப்படும் முன்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ட்ரம்ப்’’ மாஸ்க் அணிய மாட்டேன் என்று நான் ஒருபோதும்  சொன்னதில்லை. எந்த இடத்தில், எந்த சூழலில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்கச் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ட்ரம்பின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் ‘’மாஸ்க் அணியுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்ததால், ட்ரம்ப் மாஸ்க் அணிந்ததாகக் கூறப்படுகிறது.

-பா.பாரதி.