வாஷிங்டன்

மெரிக்காவில் ஆனலைன் மூலம் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர் விசா ரத்து அறிவிப்பை  அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.   மாணவர்களின் வசதிக்காகப் பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புக்கள் தொடரப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.  எனவே இங்கும் அனைத்தும் வகுப்புக்களும் ஆன்லைன் மூலம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு ஆன்லைன் வகுப்புக்கள் மூலம் கல்வி பயிலும் வெளி நாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.   இதனால் வெளிநாடுகளில் இருந்து பயிலும் மாணவர்கள் கடும் கலக்கம் அடைந்தனர்.  அதிபரின் இந்த உத்தரவிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  அமெரிக்காவில் உள்ள பல மாகாண அரசுகள் அதிபரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன.

அமெரிக்காவில் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மசசூசெட்ஸ் கல்வியகம் உள்ளிட்ட பல கல்வி அமைப்புக்கள் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன  அதிபரின் இந்த உத்தரவால் கல்வியில் சிறந்த பல வெளிநாட்டு மாணவர்களை தாங்கள் இழக்க நேரிடும் எனவும் பல்கலைக்கழகங்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனவும் அவை தெரிவித்தன.  இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் அதிபரின் இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அச்சத்தில் இருந்த பல வெளிநாட்டு மாணவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.   இது குறித்து பல மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.