உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக சுமார் 1.5 கோடி அளவுக்கு இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 47 லட்சம் என்றும் மதிப்பீடு செய்துள்ளது.

சுமார் 5 லட்சம் பேர் மட்டுமே மரணமடைந்ததாக இந்தியா கூறிவரும் நிலையில் WHO வெளியிட்டிருக்கும் மதிப்பீடு சுமார் 10 மடங்கு அதிகமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கள ஆய்வு நிறுவனங்கள் வழங்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதாக WHO தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கொரோனா பெருந்தொற்று மரணம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு உள்ளிட்ட விவரங்கள் மிகவும் வேதனையளிப்பதாகக் கூறினார், உலக நாடுகள் பலவும் தங்கள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

WHO வெளியிட்டுள்ள இந்த மதிப்பீட்டில் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழக்க நேர்ந்ததையும் கொரோனா மரணமாகவே மதிப்பீடு செய்துள்ளதாக கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்த மதிப்பீடு குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்த போதும், இந்த மதிப்பீடு குறித்த முழுவிவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

இதேபோல், 1918 ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளு காரணமாக உலகம் முழுக்க 10 கோடிக்கும் அதிகமானோர் இறந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி