சென்னை:
ப்ரல் 1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான அளவில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், சுங்க கட்டணத்தை, தனியார் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். இதைக்கண்டித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி 11 மணிக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, கடந்த, 20ம் தேதி நடந்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து உறுப்பு சங்க நிர்வாகிகளும், தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன், தங்களது பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுங்க சாவடியில் திரளாக கலந்து கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, சம்மேளனத்தின் ஒற்றுமையையும், லாரி உரிமையாளர்களின் பலத்தையும் நிரூபித்து, ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆர்ப்பாட்டத்தில், பதாகை தயார் செய்து கொள்வதுடன், கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன் அல்லது எஸ்.பி., அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது