பிள்ளையால் தொல்லை: டாக்டர் கிருஷ்ணசாமியைத் தொடர்ந்து..

Must read

குறைந்த மதிப்பெண் பெற்ற தனது மகளை,  (ஜெயலலிதாவிடம் வேண்டி)  முதல்வர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர்த்துவிட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் அசடு வழிந்து நழுவிச் செயன்றார் கிருஷ்ணசாமி.

இந்த விவகாரத்தினால் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் அவர்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமி போலவே, தனது வாரிசால் சங்கடத்துக்கு ஆளாகியிருக்கிறார் சி.பி.ஐ. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன்.

கிருஷ்ணசாமி

ஆம்.. தா.பா.வின் மகன் டேவிட் ஜவஹர், சென்னை பல்கலையின் பதிவாளராக பணி புரிகிறார். இவர் ஐந்து கோடி ரூபாயை முறைகேடாக கையாண்டதாக குற்றம் சாட்டி, பேராசிரியர்கள் சிலர் கவர்னரிடம் மனு அளித்துள்னர்.

இது குறித்து பல்கலை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கடந்த 2014ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டேவிட் ஜவஹர் சென்னை பல்கலை பதிவாளராக நியமிக்கப்பட்டார். அப்போது (டேவிட் ஜவஹரின் தந்தை) தா.பா., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தார்.

அப்போது காரைக்குடி அழகப்பா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழங்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் மருத்துவம் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் மாதக் கணக்கில் காலியாக இருந்த நிலை. அப் பதவிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை அமரவைக்க அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். அதற்காக பேரங்களும் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, தகுதியில்லாத நபர்களை துணைவேந்தர் பதவிகளில் நியமிக்க முயற்சிகள் நடப்பதாகவும் அதை தடுத்து நிறுத்தவும் கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFUFA) ஒருங்கிணைப்பாளருமான கிருஷ்ணசுவாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் அப்போது தடைபட்டது.

அந்த காலகட்டத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹரை துணைவேந்தராக கொண்டுவருவதற்கு ஆட்சி மேலிடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

ஆனால், துணைவேந்தராக நியமிக்கப்படுபவர்கள், பத்தாண்டுகளுக்கு குறையாமல் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்க வேண்டும் என்பது யுஜிசி விதி. கிருஷ்ணசுவாமி தனது வழக்கில் இந்த விதியும் மீறப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டேவிட் ஜவஹருக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருந்தது.

ஆகவே அவரை துணைவேந்தராக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமனம் செய்தார்கள். அந்த காலகட்டத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரதப் பிரதமராக வருவதற்கு  அனைத்துத் தகுதிகளும் இருக்கின்றன என்று தா.பா. புகழ்ந்து ரொம்பவே பிரபலம்”  என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தா.பா.

மேலும் சில தகவல்களும் பல்கலை வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன:

“பல்கலையின் துணை வேந்தராக தாண்டவன் இருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு நானோ டெக்னாலஜி துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ரூ.5 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டு வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதற்கு காரணம், டேவிட் ஜவஹர்தான் என்று பேராசிரியர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

ஆனால் அவரோ, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று பேராசிரியர்களுக் கடிதம் எழுதினார். அதை நம்ப யாரும் தயாராக இல்லை.

இந்த நேரத்தில்தான், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சென்னை பல்கலையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில ஊழல்கள் நடைபெறுகின்றன என்று அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். அவரது அறிக்கையில் இந்த ஐந்து கோடி ரூபாய் விவகாரம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பதிவாளர்  டேவிட் ஜவஹர் பணிக் காலம் வரும் ஃபிப்ரவரி மாதம் முடிவடைகிறது.

ஆகவே அதற்குள் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் சிலர் முனைந்துள்ளனர். இந்த புகார் குறித்து கவர்னரிடமும் சமீபத்தில் மனு அளித்துள்ளனர். விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்கிறது பல்கலை வட்டாரம்.

ஆக.. நெட்டிசன்களுக்கு கிருஷ்ணசாமியை அடுத்து அடுத்த நபர் கிட்டிவிட்டார்.

More articles

Latest article