இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் கனடா விசா நடைமுறையில் சிக்கல் எழுந்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

இதனையடுத்து விசா நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

கனடாவில் இருந்து இயங்கி வரும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம்சாட்டினார்.

மேலும், இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடாவில் இருந்து வெளியேற்றியது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்தியா இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளதுடன் தனது பங்கிற்கு கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது.

இருநாட்டு ராஜ்ஜிய உறவில் விரிசல் எழுந்த நிலையில் தற்போது கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான அனைத்து விசா நடவடிக்கையையும் இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து விசா விண்ணப்ப சேவையை வழங்கி வரும் BLS நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, “செப்டம்பர் 21, 2023 முதல் நடைமுறைக்கு வரும், இந்திய விசா சேவைகள் செயல்பாட்டின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதுப்பிப்புகளுக்கு BLS இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.