டெல்லி: வினேஷ் போகத் தொடர்பான பிரச்சினையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் அநாகரிக நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
18வது மக்களவை அமைக்கப்பட்டது முதல் மக்களவை மற்றும் மாநிலங்களையில் எதிர்க்கட்சிகளின் வரம்பு மீறிய நடவடிக்கை மக்களை அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது. இந்த முறை மத்திய பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால், கூட்டணி கட்சிகள் மூலம் ஆட்சியை அமைத்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், மக்களவை மற்றும் மாநிலங்களைவில் மக்கள் விரோத போக்குகளை அரங்கேறி வருகின்றன.
ஆரோக்கியமான மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசுவதற்கு பதிலாக, தேவையில்லாத நிகழ்வுகளை அரசியலாக்கி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோஷமிட்டது. இதனால் அவை அமளியானது.
அப்போது பேசிய ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் , அவர்கள் (எதிர்க்கட்சியினர்) தங்கள் இதயங்களில் மட்டும் ரத்தம் கொட்டுவதாக நினைக்கிறார்கள்… அந்த பெண்ணால் ஒட்டுமொத்த தேசமும் வேதனையில் உள்ளது. எல்லோரும் அந்த சூழ்நிலையை பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் அதை பணமாக்க, அரசியலாக்குகிறார்கள். அது அந்த பெண்ணுக்கு ஏற்படும் மிகப்பெரிய அவமரியாதையாகும் என கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் அவைத்தலைவரை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த ஜெகதீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.