சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாளை  தமிழ்நாடு அரசுன் மீண்டும்  பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு ஆண்டுகளாக அவ்வப்போது போராட்டங்களை நடத்தி திமுக அரசுக்கு நினைவூட்டி வருகின்றனர். அதன்படி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும், புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முன்வைத்து வருகின்றனர்.

இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பேருந்து சேவை முடங்கியது. மக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து,  தொழிலாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.   இது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், 6 அம்ச கோரிக்கைகளில் பொங்கலுக்கு முன்பாக முதற்கட்டமாக அகவிலைப்படி 4 மாத தொகையை வழங்க போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்திருந்ததால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு  நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஊழியர்களுக்கு போராட்டம் நடத்த முழு உரிமை உள்ளது எனவும், ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போராட்டத்தை தொடரலாமே என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்பேரில், அரசு சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை விடப்பட்டது.  இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (20ந்தேதி)  நடைபெறுவதாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 3 மணியளவில் சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும்,  ஒருவேளை இந்த பேச்சுவார்த்தையும்  தோல்வியில் முடிவடைந்தால்,  போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.