திருச்சி:

டாஸ்மாக் மதுபான கடை முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்ததால் குடிமகன்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் மூலம் 106 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ரோந்து போலீசார் டிடி (டிரங்க் அண்டு டிரைவ்) வாகனங்களை பிடித்து வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து போலீசார் ஜீப்களுடன் டாஸ்மாக் மதுபான கடைகளின் அருகில் காலை முதல் இரவு வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான கடையில் இருந்து வெளியே வரும் வாகனங்களை கண்காணித்து மடக்கி பிடித்து வழக்குப் பதிவு செய்து வந்தனர். கடந்த சில தினங்களாக இந்த பணி நடந்தது

இதனால் மதுபான கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்ததால் பார் உரிமையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை முன்பு போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து குடிமகன்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு ஜீப்பில் நின்று வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்த போலீசார் தலைதெறிக்க ஓடினர். வழக்கு பதிவு செய்வதோடு போலீசார் வசூல் வேட்டையிலும் ஈடுபட்டதால் குடிமகன்கள் அவதிப்பட்டனர்.

இந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 106 பேரில் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 265 டூவீலர்கள், 69 கார்கள் உள்பட 380 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.