மோடி படத்தை அனுப்பி திருச்சியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை திருடியுள்ளது.

வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி டிஜிட்டல் முறையில் பணம் திருடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் திருச்சி புத்தூர் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடையில் நாள் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் மெஹபூப் கான் என்ற நபரிடம் இருந்து நூதன முறையில் பணத்தை ஆட்டையை போட்டுள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்துள்ள மெஹபூப் கான், தனது மொபைலுக்கு ஸ்கிராட்ச் கார்ட் ஒன்று வந்ததாகவும் அதை சுரண்டிப் பார்த்ததில் அதில் பிரதமர் மோடியின் படத்துடன் உங்களுக்கு ரூ. 4997 பரிசுத் தொகை விழுந்திருப்பதாகவும் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

பிரதமர் படத்துடன் வந்த குறுஞ்செய்தியை நம்பி தனது வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக்கணக்கில் இருந்த 5000 ரூபாய் மொத்தமாக சுரண்டி எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.

இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ள அவர் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு கூறியுள்ளார்.