ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், தற்போது தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது  புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக மாறி வருகிறது.

இந்த மாவட்டம் விரைவில் மக்கள் வாழ தகுதியற்ற மாவட்டமாக மாறி வரும் சூழல் உருவாகி வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள், தொழிற்வளர்ச்சி என்ற பெயரில், கண்டுகொள்ளாமல் இருப்பது  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  “தமிழக அரசு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும், சிகிச்சையை அளித்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது”  என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மாவட்டங்களில் ராணிப்பேட்டையும் ஒன்று. தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைந்துள்ள மாவட்டம் ராணிப்பேட்டை.  சென்னையிலிருந்து 120 கிமீ தொலைவில்  அமைந்துள்ளது.  ராணிப்பேட்டை நகரம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.  இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்குள்ள தொழிற்சாலைகளில் உபயோகப்படும் ரசாயனங்களால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் பல ஆண்டு காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள தோல் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தேவையின் விளைவாக, பல மையப்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகள் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ராணிப்பேட்டை அருகே உள்ள . வாலாஜாபேட்டை வி.சி.மோட்டூரில் உள்ள ராணிப்பேட்டை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (RANITEC) 92 தோல் பதனிடும் தொழிற்சாலை களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயலாற்றி வருகிறது. இதன்மூலம் . நாளொன்றுக்கு சுமார் 4500 cum கழிவுநீரைக் கையாளும் வகையில் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நாட்டிலேயே தோல் பதனிடும் கழிவுநீருக்கான மிகப் பெரிய பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் (CETP) ஒன்றாக கூறப்படுகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு இந்த கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை   நிறுவப்பட்டதில் இருந்து தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக வறப்படுகிறது.  இந்த தொழிற்சாலை கடந்த  1999 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ISO 9001 சான்றிதழைப் பெற்றது. இந்த ஆண்டு ஜனவரி 29, அன்று ISO 14001 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது மற்றும் தற்போது நெதர்லாந்தின் DET NORSKE VERITAS (DNV) மூலம் ISO 14001: 2015 சான்றிதழைப் பெற்றுள்ளது.

இவ்வாறு பல வசதிகள் செய்திருந்தாலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.பல தோல் தொழிற்சாலைகள் முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. தோல் பதனிடும் தொழிலில் இருந்து வெளியாகும்  உலோக அயனி கடுமையான நீர் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீரை முறையாக சுத்தகரிக்காமல் நிலத்துக்குள் செலுத்துவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால், அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரில், நோய்களை உருவாக்கும் குரோமியம், மென்னிசியம், ஆர்சனிக், துத்துநாகம்  போன்ற வேதிப்பொருட்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

குரோமியம் :  தோல் பதனிடும் தொழிலில் இருந்து வெளியாகும் குரோமியம் (Cr) உலோக அயனியானது கடுமையான நீர் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. குரோமியம் ஒரு கன உலோகம் மற்றும் ஒரு நச்சு மாசுபடுத்தி ஆகும், இது புற்றுநோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். தோல் பதனிடும் தொழில் குரோமியத்தை குரோமியம் உப்புகள் வடிவில் ஒரு தோல் பதனிடுதல் காரணியாகப் பயன்படுத்துகிறது, இது விலங்குகளின் தோல்களை பதனிட்ட தோல்களாக மாற்றுகிறது. தோல் பதனிடும் தொழிலில் இருந்து உருவாகும் கழிவுநீரில் அதிக அளவு குரோமியம் உள்ளது, இது முறையான சுத்திகரிப்பு இல்லாமல் நீர்நிலைகளில் வெளியேற்றப்படுகிறது, இது கடுமையான நீர் மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது.

மெக்னீசியம் (Mg):- இது பொதுவாக நீர் மற்றும் மண்ணில் காணப்படும் ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது ஒரு நச்சு மாசுபடுத்தியாக கருதப்படுவதில்லை மற்றும் கடுமையான நீர் மாசுபாட்டை ஏற்படுத்தாது.

ஆர்சனிக் :- இது தோல் புண்கள், புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு நச்சு உலோகப் போலி ஆகும். இது பொதுவாக சில பகுதிகளில் நிலத்தடி நீரில் காணப்படுகிறது, ஆனால் இது தோல் தொழிற்சாலை மாசுபாட்டுடன் நேரடியாக தொடர்புடையது அல்ல.

துத்தநாகம்:- Zn என்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு அருகு தனிமம் மற்றும் பொதுவாக நீர் மற்றும் மண்ணில் காணப்படுகிறது. இது ஒரு நச்சு மாசுபடுத்தியாக கருதப்படுவதில்லை மற்றும் கடுமையான நீர் மாசுபாட்டை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

மேலும்,  பல தொழிற்சாலைகளில்,  மாட்டின் தோல்களை பதப்படுத்தும் கூடமும், அதன் அருகிலேயே மாட்டின் கொழுப்பை உருக்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்கூடமும் செயல்பட்டுவருகிறது. இதனால்,  அங்கு  மாட்டின் கொழுப்பை உருக்கும்போது ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தோல் தொழிற்சாலைகள் மூலமாகப் பலவிதமான நோய்கள்  பரவி வரும் நிலையில், முக்கியமாக   எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தேம்பல், கேட்மியம் என்று சொல்லக்கூடிய சொறி, சிரங்கு மற்றும் கெமிக்கல் படுவதால் வரக்கூடிய அரிப்பு போன்ற நோய்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தற்போது பலர் இருதய நோய், சுவாசப்பிரச்சினை மற்றும்  ஏராளமானோர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்தும் அமைந்துள்ளது.

“ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய்“ கண்டறியப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார். அதாவது, ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு மேற்கொண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இவர்களில்,  222 பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 290 பேருக்கு கருப்பை புற்றுநோயும், 29 நபர்களுக்கு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும், சிகிச்சையை அளித்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவிபத்துள்ளார்.

தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், ராணிப்பேட்டை புற்றுநோய் நகரமாக மாறி வரும் நிலையில், அமைச்சரின் பேச்சும், ஆய்வு தகவல்களும் அதை உறுதி  செய்துள்ளன.

இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதுபோல,  மக்களை துன்புறும் தோல்தொழிற்சாலைகளையும் மூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புயுள்ளனர். 

ற்கனவே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், நம் நாட்டில், 2022ம் ஆண்டில் 14.1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டதாகவும், 9.1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும்  கூறியுள்ளது.

உலக சுகாதார  நிறுவனத்தின் ஐ.ஏ.ஆர்.சி., எனப்படும், புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், உலகம் முழுதும் உள்ள 115 நாடுகளில் உள்ள புற்றுநோய் பாதிப்புகள், சிகிச்சை மற்றும் உயிரிழப்பு விகிதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

அதில்,   உலகம் முழுதும் இரண்டு கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், 97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஆண்களில் 9 பேரில் ஒருவரும், பெண்களில் 12ல் பேரில் ஒருவரும் நோய்க்கு உயிரிழக்கின்றனர்.

இந்தியாவில்,  75 வயதுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு 10.6 சதவீதமாக உள்ளது. நோய்க்கு உயிரிழக்கும் வாய்ப்பு 7.2 சதவீதமாக உள்ளது.   2022ல் 14.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. 9.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  35,000 பேர் நம் நாட்டில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில், 16 சதவீதம் பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வறிக்கையில், நம் நாட்டில் ஆண்டுதோறும் 80,000 பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படு வதாகவும், இவர்களில் 35,000 பேர் இறப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.