சென்னை:
தமிழகத்தில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பிடித்தது.
நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.
பேரூராட்சியை பொறுத்தமட்டில் விக்கிரவாண்டி முதலிடத்தையும், ஆலங்குடி 2-வது இடத்தையும், வீரக்கால்புதூர் 3-வது இடத்தையும் பெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் 9-வது மண்டலம் முதலிடத்தையும், 5-வது மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்தது.
நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களிடம் வழங்க உள்ளார்.