சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த  விஜயகாந்த் (வயது 71) நுரையீரல் அழற்சி காரணமாக  சிகிச்சை பலனின்றி  நேற்று அதிகாலை ( டிசம்பர் 28ந்தேதி) உயிரிழந்தார். அவரது உடல் நேற்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகல்  தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இன்று அதிகாலை சென்னை கடற்கரையில் உள்ள தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் இருந்து தேமுதிக தொண்டர்கள், அஞ்சலி செலுத்த சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடற்கரை பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

இதனால்,  போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் தீவு திடல் மைதானத்தை அடையவும், தங்கள் வாகனங்களை நிறுத்தவும் போதுமான பாதுகாப்பு மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும்.

மற்ற மூத்த கலைஞர்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணாசாலை, கொடிப் பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சிக் கேடர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும். மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.

அனைத்து இலகு ரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படும்.

தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர்.சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.