கொல்கத்தா:

டப்பு உலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது ஐபிஎல் அணியின் கோச்சாக நியமனம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் டிரெவர் பேலிஸ்-ஐ தங்களது அணிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில், உலகக்கோப்பையைத் தட்டிச்சென்ற இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் டிரெவர் பேலிஸ்.

இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி நிர்வாகம், தங்களது ஐபிஎல் அணியின் கோச்சாக நியமனம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் டிரெவர் பேலிஸ்-ஐ அதிக விலை கொடுத்து அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கோச்சாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் மூடி கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது, அவரை மாற்றி டிரெவர் பேலிஸ்-ஐ நியமித்து உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்றபோதும்  சன் ரைசர்ஸ் அணியின் கோச்சாக மூடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“டிரெவர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார், மேலும் சிட்னி சிக்ஸர்களுடன் பிக் பாஷ் லீக்கையும் வென்றுள்ளார். அவர் ஒரு நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர், அதன் காரணமாகவே சன் ரைசர்ஸ்  அணி நிர்வாகம்,   தனது அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லும் நோக்கில் டிரெவரை நியமித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.

ஆனால், டிரேவர் பேலிஸ்-ன் ஒப்பந்தத்தின் காலம்  எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, மூடி சன் ரைசர்ஸ் அணியில் தனது  தனது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.