சென்னை: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி வெளியிட்டுள்ளது. அதனப்டி, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட 7 வகைப் பணிகளுக்கான தேர்வு எப்போது என்னும் உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறியிருப்பதாவது:-
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 2024 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.
1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை இந்த மாதமே வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் மற்றும் இரண்டாம் நாள் தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டெட் தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இதில் அறிவிக்கப்படவில்லை.
முதுநிலைப் பட்டதாரி உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 200 பணியிடங்களைக் கொண்ட இதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை மே மாதம் வெளியாக உள்ளது.
சிஎம்ஆர்எஃப் எனப்படும் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிக்கை ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
விரிவுரையாளர்கள், இளைய விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள் ஆகிய பணிகளுக்கான 139 மொத்த காலிப் பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தகவலை டிஆர்பி தெரிவித்துள்ளது.
மேலும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 56 காலி பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு, அதாவது 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது உத்தேச பணியிடங்கள் மற்றும் தேதிகள் மட்டுமே என்றும் இதில் கூடுதலோ, குறைவோ, மாற்றமோ இருக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணிக்குத் தேர்வாக விரும்பும் தேர்வர்கள் முதலில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். தொடர்ந்து அந்தந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் போட்டித் தேர்வையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். எனினும் இதற்குத் தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் பார்க்கலாம்.: https://www.trb.tn.gov.in/