கரூர்: தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு சொந்த இடங்களில் பல முறை அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில்,  கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களும் உடன் அழைத்து வந்திருந்தனர். இதுதொடர்பாக அவரது ஆடிட்டரையும் விசாரணைக்கு அழைத்தருந்தனர். இந்த நிலையில், தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு  மே 26-ம் தேதி வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதாரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும்  அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையின்போது, பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்யும் பணிகள், இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று கரூரில் நிலம் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.