சேலம்:

சேலம் திருச்செங்கோட்டில் கேஆர்எஸ் கல்லூரி சர்வர் பிரச்சினையால் கணினி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தி வருகிறது. அதற்கான தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், திருச்செங்கோடு பகுதியில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அங்குள்ள கேஆர்எஸ் கல்லூரியில் தேர்வு எழுத சென்றார்கள். ஆனால், அங்குள்ள சர்வர் பிரச்சினை காரணமாக அவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வு இன்று (23-06.2019) தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திருச்செங்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அங்குள்ள கேஎஸ்ஆர் கல்லூரியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தேர்வு எழுத ஏராளமானோர் குவிந்த நிலையில், கல்லூரியில் உள்ள  கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை யால், தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளானார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய தேர்வு 1 மணி வரை நடைபெறாத நிலையில் தேர்வு எழுத வந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று (ஞாயிறு) ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.  தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மற்றும் இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் முகமை விதிகளின்படி 11, 12ம் வகுப்பிற்கான கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த புதிய விதிகளின் அடிப்படையில் 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்தத் தேர்வில் பங்கேற்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 7,546 ஆண்கள், 23,287 பெண்கள் என மொத்தம் 30,833 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கணினி ஆசிரியர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித்தேர்வு ஆன்லைன் மூலமாக இன்று (23.06.2019) நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும். தேர்வு மையத்தின் கதவுகள் மூடும் நேரத்திற்குப் (காலை 9.15) பின்னர் வந்தால் தேர்வர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர் எனவும், தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வு மையத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்படும். தேர்வர்களின் எதிர்காலத் தேவைக்கு அனுமதிச் சீட்டினைப் பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருச்செங்கோடு பகுதியில் கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.