சென்னை: ஊடகங்களின் செயல்பாட்டில் நடுநிலை அம்சம் ஏற்படும்வரை, பாட்டாளி மக்கள் சார்பில் ஊடக விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

அவர் கூறியுள்ளதாவது, “செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில், நடுநிலையையும் அறத்தையும் பூதக் கண்ணாடி வைத்துதான் தேட வேண்டியுள்ளது. எனவே, ஊடகங்களில் நடுநிலை திரும்பும்வரை, பாமக சார்பாக யாரும் விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடுநிலை ஊடகங்கள் என்று அறிவித்துக்கொள்ளும் ஊடகங்கள் மீது கடந்த பல்லாண்டுகளாகவே இந்த விமர்சனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேசமயம், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி திடீரென நாடகமாடுவதாயும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

அவர்களின் அரசியல் தோல்வியை மறைப்பதற்காகவே இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி, சில காரணங்களுக்காக ஊடக விவாதங்களைப் புறக்கணிப்பதாக முடிவு செய்தது. பின்னர், தமிழ்நாட்டில் அதிமுகவில் எழுந்த உட்கட்சிப் பூசல்களையடுத்து ஊடக விவாதங்களைப் புறக்கணிப்பதென அதிமுகவும் முடிவுசெய்தது என்பது நினைவுகூறத்தக்கது.