சிர்ஹிந்த்

திடீரென சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சாபில் பயணிகள் ரயில் நிலையத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பல்வேறு நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர். பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அவ்வகையில், பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் இருந்து பீகாரில் உள்ள சஹர்சா வரை சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட இருந்தது. சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்காக சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர் .

திடீரென இந்த சிறப்பு ரயில் ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பயணிகள், பிளாட்பாரத்திலும் ரயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் கற்களை எடுத்து காவல்துறையினர் மீதும், நிறுத்தியிருந்த பயணிகள் ரயில்கள் மீதும் வீசினர். அப்பகுதி முழுவதும் இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி பயணிகள் இடையே அமைதியை ஏற்படுத்தி உள்ளனர்.