சென்னை,
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக அரசுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் மாதம் 9ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கமாகும். 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத் துக்கான முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது, அதில் முடிவு ஏதும் எடுக்கப்படாததால் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை குரோம்பேட்டை பணிமனை வளாகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 47 தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இதில் அரசுக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 9ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், இடைக்கால நிவாரணமாக 1200 கோடி தர அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள 7 ஆயிரம் கோடி ரூபாயில் 1200 கோடி மட்டும் தற்போது ஒதுங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தின்ர் கடந்த மே மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்தையில், அமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அரசு கூறியபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கூறி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அரசுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 19ந்தேதி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது எந்தவித முடிவும் எடுக்காமல், 25ந்தேதி போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.