சென்னை :

“ஆளுநரிடம் ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்டது பொய்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது, அவரை மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாகர் ராவ் உள்பட  மத்திய மாநில அமைச்சர்கள்,  அனைத்துக்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் அப்பல்லோ வந்து, ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் சந்தித்தது குறித்து எந்தவித புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்பட வில்லை.

அப்போது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை  கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார் என   ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியானது.

அதில்,  முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாகவும்  ஆளுநர் சார்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை குறித்து அமைச்சர்களும், டிடிவி தரப்பின ரும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன மகன் ஜெ.தீபக் பகீர் தகவலை தெரிவித்து உள்ளார்.

ஆளுநர்  ராவ் ஜெயலலிதாவை சந்திக்க  மருத்துவமனை வந்தபோது, தான் மருத்துவமனையில் இருந்ததாகவும், அப்பொழுது ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்தார் . ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என்றும் ஜெயலலிதாவின் அண்ணண் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் ஒவ்வொன்றும் ஓராண்டு பிறகு தற்போது வெளிவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.