கோவை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வரும் நிலையில், கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து,  சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதுதொடர்பாக திமுக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு, போக்குவரத்து துறை தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றும் (மார்ச் 6ந்தேதி) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், கோவையில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள வந்த போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகி ஒருவர், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த தகவலை கேட்டு, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

 கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சார்பில்,  நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில்,   போக்குவரத்து ஊழியர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, தொ.மு.ச போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதாகவும், தொழிற்சங்கத்திற்குள் இருக்கக்கூடிய பிரச்சனை காரணமாக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, தன்னை போன்றவர்களை வேறு இடத்துக்கு மாறுதல் செய்ததாகவும், இது குறித்து அதிகாரிகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில்,  திமுக நிர்வாகிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களுடனான முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி!