டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பைக் சாகசம் மற்றும் அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும் இளைஞர் டிடிஎப் வாசன். தனது இந்த சாகசங்களை கேமராவில் படம்பிடித்து தனது யூடியூபில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி பல ஊர்களுக்கு சாலையில் அதிவேகமாக பயணம் செய்வதும் சாகசம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

யூடியூபில் இதனை லைவ் ஸ்ட்ரீம் ஆகவோ அல்லது வீடியோக்களாகவோ வெளியிட்டு, அவர் அணியக்கூடிய பாதுகாப்பு உடைகளைக் கூட வாங்க வசதியில்லாத ஏதும் அறியா இளம்தலைமுறையினரையும் சிறார்களையும் தனது ரசிகர் பட்டாளமாக சேர்த்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் செல்லும் முயற்சியில் இறங்கிய இவர் காஞ்சிபுரத்தை தாண்டிய போது விபத்தில் சிக்கினார்.

இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசன் எலும்பு முறிவுக்கு கட்டுக்கட்டிக்கொண்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அந்த சாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கான சாலையின் இடதுபுறம் தனது டூ-வீலரில் ஒரு வீலை தூக்கியபடி வீலிங் செய்தபடி சென்ற டிடிஎப் வாசன் நிலை தடுமாறி குப்புற விழுந்தார்.

பல அடிதூரம் தூக்கி வீசப்பட்டதால் அவருக்கு கையெலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுவது, விபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக செல்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சாலை விதிகளை மீறி தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிவரும் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

சாலைவிதிகளைப் பின்பற்றி சாலை மார்க்கமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உலகையே வலம் வரும் இளைஞர்கள் மத்தியில், நல்ல ஓட்டுனருக்கு உண்டான எந்த ஒரு பண்பும் இல்லாத இதுபோன்ற நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது.