சென்னை:
சென்னை மாநர காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.
சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்ய விரும்புகிறேன்.
கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். அவசியம் ஏற்படும் போது வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் செல்லிடப்பேசியில் காணொலி (வீடியோ) வாயிலாகவே பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி  ஏற்படுத்தப்படும்.
இந்த திட்டம் நாள்தோறும் அல்லது  வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் என்னிடம் நேரடியாகவே புகார் அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும்
பொது மக்களுடன் பழகும் முறைகள் மற்றும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி வழங்கப்படும். வரும் 10 ஆம் தேதி முதல் அனைத்து காவலர்களுக்கும் பகுதி பகுதியாக பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு சென்னை மாநகர புதிய  காவல் ஆணையர் தெரிவித்தார்.