சென்னை :
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட  ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில்  ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பணம் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானதாகும்.
சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகளில் மாற்றிய பழைய, கிழிந்த ரூபாய்களை ரிசர்வ் வங்கி சேகரித்தது. இந்த நோட்டுக்களை  வழக்கம்போல, நேற்று முன்தினமும் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவந்தனர்.
மரப்பலகைகளால் செய்யப்பட்ட 226 பெட்டிகளில் பணம் அடைக்கப்பட்டது.  இதில் சில பெட்டிகளில் நல்ல ரூபாய்களும் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு அந்த பணப் பெட்டிகள், தனி சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டன.  இதையடுத்து  சேலத்தில்  இருந்து புறப்பட்ட சேலம் – எழும்பூர் எக்ஸ்பிரஸ்(11064) ரயிலில்  இன்ஜினுக்கு அடுத்ததாக பணம் ஏற்றப்பட்ட தனிப்பெட்டி  இணைக்கப்பட்டது.
பாதுகாப்புக்காக டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் வந்த  ஆயுதப்படை காவலர்கள், அருகில் இருந்த பொதுப்பெட்டியில் பயணம் செய்தனர்.
இந்த ரயில் மறுநாள் அதிகாலை அதிகாலை 4.40 மணிக்கு பதிலாக 13 நிமிடங்கள் முன்னதாகவே  சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.  ஏழாவது நடைமேடைக்கு ரயில் வந்த பிறகு,  ரிசர்வ் வங்கிக்காக இணைக்கப்பட்ட சரக்கு (பண)  பெட்டி மட்டும் தனியாக கழற்றப்பட்டு யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து  சரக்குகள் கையாளும் தடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான பெட்டிகள் எழும்பூரில் இருந்து சூப்பர் பாஸ்ட் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலாக மும்பை கிளம்பிச் செல்லும்.
இதற்கிடையே யார்டுக்கு கொண்டு வரப்பட்ட தனிப்பெட்டியில் இருந்த பணப் பெட்டிகளை லாரிகள் மூலம்   கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக  காலை 11.30 மணியளவில் ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் நடராஜன் தலைமையில்  அதிகாரிகள் ரயில் பெட்டியில் இருந்த சீலை உடைத்து திறந்தனர்.  அப்போது ரயில் பெட்டியின் கூரையில் இருந்து வெளிச்சம் பெட்டிக்குள் விழுந்துள்ளது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி.
ரயில் பெட்டியின் மேற்பகுதியில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு  ஓட்டை போடப்பட்டிருந்தது. தவிர, அந்த வேகனில் இருந்த  4 பணப்பெட்டிகள் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்தது. அதில் 2 பெட்டிகளில் இருந்த பணம் முழுமையாகவும், ஒரு பெட்டியில் பாதி பணமும்  காணவில்லை.  இன்னொரு பெட்டி திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

சோதனை தொடர்கிறது
சோதனை தொடர்கிறது

இதையடுத்து உடனடியாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்தனர். ரயில்வே போலீஸ் ஐஜி ராமசுப்ரமணியன், எஸ்பி டாக்டர் விஜயகுமார், டிஎஸ்பி ரவிகுமார், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பாகி,  சீனியர் டிஎஸ்சி அஷ்ரப், இன்ஸ்பெக்டர் சகாயராஜ் ஆகியோர் ரயில் பெட்டிக்கு வந்து சோதனை செய்தனர்.   தடய அறிவியல்  துறையினரும்  வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆங்கிலப் படங்களில் வருவது போன்று இந்த ரயில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. ஓடும் ரயிலில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவம் நாட்டிலேயே இதுதான் முதல் சம்பவம்.
இந்த. சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்திருந்தாலும்  ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர். ரயிலில் மொத்தம் 226 பணப்பெட்டிகள் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் 1 முதல் 226 வரை வரிசை எண்கள் எழுதப்பட்டு இருந்தன.  ஒவ்வொரு பெட்டியிலும் 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தன. இப்படி மொத்தம் 342 கோடி ரூபாய் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொத்த பணப்பெட்டிகளில்  4 பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. அதில் 2 பெட்டிகளில் இருந்த பணம் முழுமையாகவும், ஒரு பெட்டியில் பாதியும் கொள்ளை போயிருந்தது. இன்னொரு பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.  வரிசை எண் வாரியாக ஒவ்வொரு பெட்டியிலும் எவ்வளவு பணம் இருக்கும் என்ற விவரம் தெரிந்ததால் 5.78 கோடி ரூபாய் கொள்ளை போனதாக நேற்று மாலை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர்.
பணம் கொண்டு வந்த பெட்டிக்கு பாதுகாப்பாக சேலத்தில் இருந்து டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட ஆயுதப்படையினர் வந்துள்ளனர். பணம் இருந்த பெட்டியில் பயணம் செய்ய வசதியில்லை என்பதால்,  அருகில் இருந்து பொதுப்பெட்டியிலும், சிலர் முன்பதிவு பெட்டியிலும் பயணம் செய்துள்ளனர். ரயில் நிற்கும் போது இறங்கிச் சென்று பணம் இருந்த பெட்டியை கண்காணித்ததாக  அவர்கள்  தெரிவித்துள்ளனர். அதையும் மீறி கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது அதிசயக்க வைக்கிறது.
2
 
கொள்ளை நடந்தது எங்கே..?
சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் ராஜ்மோகன்,  “சேலத்தில் இருந்து புறப்பட்ட ரயில், ஆத்தூருக்கு இரவு 10.10  மணிக்கு சென்றுள்ளது. அதன்பின் தான், கொள்ளை நடந்திருக்க வேண்டும்.  இதனால், ஆத்தூரில் இருந்து  விருத்தாச்சலம் வரை ரயில்வே  தண்டவாளத்தில் டிராலியில் சென்று அங்குலம், அங்குலமாக சோதனை செய்ய இருக்கிறோம்.  அதில், ரூபாய் நோட்டுகள், ரயில்  பெட்டியில் உடைக்கப்பட்ட இரும்பு தகடு  ஏதும் ரயில்வே தண்டவாளத்தை  ஒட்டிக்கிடக்கிறதா என சோதிப்போம்.
இதேபோல், சென்னை ஆர்பிஎப்  அதிகாரிகள், அங்கிருந்து விருத்தாசலம் வரை  டிராலியில் வந்து  சோதனையிடுவர்.  விரைவில் கொள்ளையரை பிடித்துவிடுவோம்” என்றார்.
தற்போது சென்னையில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த ரயில் பெட்டியில் தடயவியல் சோதனை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. காவல்துறையினரும் சோதனை நடத்தி வருகிறார்கள்.