கரூர்: கரூர் மாவட்டத்தில் பாயும் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளை மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று (பிப்.15) உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர். அங்கு நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் அனைவரும், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர்.
அப்போது, நீச்சல் தெரியாத 4 மாணவிகள் காவிரில் ஓடிய தண்ணீரில் சிக்கி மூழ்கி உள்ளனர். இதையறிந்த மற்ற மாணவிகள் அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. , தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சக மாணவிகளும், உடற்கல்வி ஆசிரியரும், அருகே உள்ள பொதுமக்களிடம் உதவி கேட்டதுடன், மாயனூர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த மாயனூர் போலீஸார் மற்றும், முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். அவர்களும் விரைந்து, காவிரி ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய மாணவிகளை தேடினர்.
சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு, தமிழரசி, இனியா, லாவண்யாவின் உடல்கள் இறந்த நிலையில், அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சோபிகாவின் உடலும் மீட்கப்பட்டது.
இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் கரூரிலும், புதுக்கோட்டையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.