சேலம் :  தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மோகத்தால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மியால் தனது படிப்புக்கு பீஸ் கட்ட வைத்திருந்த பணம் 75 ஆயிரம் ரூபாயை இழந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, புதிய சட்டத்தை உருவாக ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு முன்னெடுத்து வருகிறது. அதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, அதன் அறிக்கையும் பெறப்பட்டது.

இதையடுத்து, திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு ஏமாற்றமே தொடர்ந்து வருகிறது.  தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைமுறைகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில்   சேலம் மாவட்டம் தலைவாசல் உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ், இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது படிப்புக்காக பீஸ் கட்ட வைத்திருந்த ரூ.75ஆயிரம் ரூபாயை ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றுள்ளார். இதனால்,  மனவேதனை அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அதை அறிந்த அவரது பெற்றோர், மாணவரை ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓராண்டில் 27 தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து திமுகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…