சென்னை: தமிழ்நாட்டில் புதிய போக்குவரத்து விதிகள் நேற்று (அக்டோபர் 26ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.15.50 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. புதிய வாகன அபராதத் தொகை வருகிற 28-ந்தேதிக்கு மேல் வசூலிக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், திடீரென 26ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக 25ந்தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன், வாகன ஓட்டிகள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் இறங்கினர். ஆங்காங்கே போக்குவரத்தை மடக்கி சோதனை நடத்தினார். இதையடுத்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் நேற்று மட்டும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், விதிகளை மீறியதாக ரூ.15.50 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.