டெல்லி: விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக அரியானா, உத்தரப் பிரதேசத்துக்கான டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், விவசாயிகள் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளுடன் வேறு சில மாநில விவசாயிகளும் இணைந்து கொண்டனர்.  2 மாதங்களுக்கும் மேலான இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் இந்த போராட்டம் 68வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் காசிப்பூர் எல்லையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அதன் காரணமாக நொய்டாவுக்கான வாகன போக்குவரத்து டெல்லி அக்சர்தம் பகுதியில் திருப்பி விடப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்படுகின்றன. அதனால், டெல்லியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.