சென்னை: அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கிண்டி முதல் சாந்தோம் வரையிலான நெரிசலை குறைக்க கிண்டி சின்னமலை முதல் சாந்தோம் கலங்கரை விளக்கம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ள நிலையில், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆலோசகரை தமிழகஅரசு நியமித்து உள்ளது. இதன் அறிக்கை பெற்று, ஆய்வு செய்த பிறகு, மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் கட்டுப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்போது, இது சென்னையின் மிக நீண்ட மேம்பாலமாக இருப்பதுடன், வாகன ஓட்டிகள் சுமார் 10 நிமிடத்தில் கிண்டியில் இருந்து சாந்தோம் கலங்கரை விளக்கம் வந்துவிடும் நிலை உருவாகும். இது வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரதாசமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் பெருகி வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, 485 கோடி ரூபாயில், 3.50 கி.மீ., துாரத்தில் நான்கு வழிபாதை மேம்பாலம் கட்டப்பட உள்ளது.அதேபோல், வியாசர்பாடி, ஓட்டேரி, தி.நகர் ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாயில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், மத்திய கைலாஷ், டைடல் பார்க் சிக்னலில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம், வாகன நெரிசல் பல மடங்கு குறையும் என கருதப்படுகிறது.

அதுபோல சென்னை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்குவது அடையாறு, காந்திமண்டபம், ஐஐடி போன்ற பகுதிகளில் கடும் வாகன நெரிசல் உள்ளது. குறிப்பாக அடையாறின்  இருபுறமும் ஓஎம்ஆர், இசிஆர் என இரு முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலை பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் மற்ற பகுதிகளில் இருந்து அடையாறு வழியாக வாகனங்களில் செல்வதால், இந்தபகுதிகளில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. பகுறிப்பாக ஓஎம்ஆர் பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளதால், 24மணி நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் பகுதியாக அந்த சாலை உள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் கடுமையான வாகன நெரிசலில் சிக்கி பல மணி நேரம் வரை காத்திரும் சூழலும் உள்ளது. மேலும் விமான நிலையம், மற்றும் கோயம்பேடு பகுதிகளில் இருந்து வாகனங்களும் இந்த சாலையை உயபயோகப்படுத்துகின்றன. மேலும் கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, காந்தி மண்டபம் போன்ற முக்கிய இடங்கள் உள்ளதால், அங்கு வரும் ஏராளமான வாகனங்களாலும் கடுமையாக போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து,  காந்தி மண்டபம் சாலை, அடையாறு சாலை, கிரீன்வேஸ் சாலை, சாந்தோம் பிரதான சாலை, பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து, சின்னமலை சந்திப்பு வரை, 10 கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மூன்று வெவ்வேறு வழித்தடங்களில், இது குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அறிக்கை தயாரிப்பதற்காக, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து சின்னமலை அல்லது கிண்டி ஹால்டா சந்திப்பு வரை, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. கிண்டியில் இருந்து, தலைமை செயலகம் செல்ல, அண்ணா சாலை வழியாக, 12 கி.மீ., பயணிக்க வேண்டும். அடையாறு, கிரீன்வேஸ் சாலை வழியாக, 14 கி.மீ., பயணிக்க வேண்டும்.

அண்ணாசாலையில், சிக்னல்கள் அதிகம் உள்ளதால் காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது. இதனால்,  பெரும்பாலான வாகன ஓட்டிகள், அடையாறு, மெரினா வழியாக செல்கின்றனர்.அடையாறு வழியாக, கிண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் மட்டுமில்லாமல், ஓ.எம்.ஆர்., மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வாகனங்கள் செல்வதால், கிரீன்வேஸ் சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

கிரீன்வேஸ் சாலையில், நீதிபதிகள், அமைச்சர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. இவர்கள், நீதிமன்றம், தலைமை செயலகம் செல்லும்போதும், அமைச்சர்களை பார்க்க கட்சியினர், பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போதும், கிரீன்வேஸ் சாலையில் மூச்சு முட்டும் அளவுக்கு நெரிசல் ஏற்படும். பல நேரங்களில், அடையாறு மேம்பாலம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இதனால், அடையாறு, கீரின்வேஸ் சாலை, சாந்தோம் பிரதான சாலையில் ஏற்படும் வாகன நெரிசலை தடுக்க, கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து, அடையாறு ஆற்றங்கரை வழியாக சின்னமலை பாலம் வரை அல்லது சாலை வழியாக, கிண்டி ஹால்டா சந்திப்பு வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இந்த திட்டம் குறித்து ஆராய  ஆலோசகரை தமிழகஅரசு நியமித்து, அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது. மேம்பாலம் அமைப்பதற்கான  சாத்திய கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க, 45 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.  எளிதான வழித்தடம், நிலம் எடுப்பு, இதர துறைகளின் அனுமதி, இணைப்பு சாலைக்கான சாத்தியக்கூறுகள் போன்ற அனைத்தும் ஆராயப்படும். இந்த பணியை, விரைந்து முடித்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப இருப்பதாகவும், அதற்கு குறைந்தது 6 மாதம் காலம் ஆகும் என கூறப்படுகிறது.

அதன்படி, சாந்தோம்,  கலங்கரை விளக்கு சந்திப்பில் இருந்து, லுாப் சாலை, பட்டினம்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, அடையாறு, மத்தியகைலாஷ், காந்திமண்டபம் வழியாக கிண்டி ஹால்டா சந்திப்பு வரை  என திட்டமும், மற்றொரு திட்டம்,  கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து, சாந்தோம் பிரதான சாலை, கிரீன்வேஸ் சாலை, அடையாறு, மத்தியகைலாஷ், காந்தி மண்டபம் வழியாக கிண்டி ஹால்டா சந்திப்பு வரையும், 3வது கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து, லுாப்சாலை, பட்டினம்பாக்கம் பேருந்து நிலையம் வரை, சாலை மேம்பாலமும், சீனிவாசபுரம், திரு.வி.க.,பாலம், கோட்டூர்புரம் வழியாக சின்னமலை வரை அடையாறு ஆற்றங்கரை ஓரமாக உயர்மட்ட மேம்பாலமும் அமைக்க ஆராயப்படுகிறது.

இந்த மேம்பாலமானது,  9 முதல் 10 கி.மீ., வரை துாரம்  அமையும் என்றும், இது சென்னையின் நீளமான மேம்பாலமாக அமையும் என கூறும் அதிகாரிகள், இதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், கிண்டியில் இருந்து, மெரினா நோக்கி செல்வோர், இருவழி பாதையில், உயர்மட்ட மேம்பாலத்தில், சிக்னல் இல்லாமல் 10 நிமிடத்திற் குள் செல்லமுடியும்.

அடையாறு, திரு.வி.க.பாலம் மற்றும் கோட்டூர்புரம் சாலையில், மேம்பாலத்தில் இணைப்பு சாலை அமைக்க முடியுமா என ஆராயப்பட உள்ளது. இரு சந்திப்பில் இணைப்பு சாலை அமைந்தால், கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து, அடையாறு, பெசன்ட்நகர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதிக்கு இருவழிபாதையில் எளிதாக செல்ல முடியும். அதேபோல், சின்னமலையில் இருந்து, கோட்டூர்புரம் செல்ல முடியும்