பிரதம மந்திரி நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வர உள்ளார்.

முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடக்க இருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க இருக்கும் அவர் 20ம் தேதி ஸ்ரீரங்கத்திலும் 21ம் தேதி ராமேஸ்வரத்திலும் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் கப்பல்படை தளத்தில் வந்து இறங்கும் பிரதமர் போர் நினைவுச் சின்னம் வழியாக நேரு விளையாட்டு அரங்கம் செல்கிறார். துவக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அன்றிரவு தங்குகிறார்.

இதனால் மாலை 3 மணி முதல் கடற்கரை காமராஜ் சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை, சர்தார் படேல் சாலை, ஆகிய முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளதை அடுத்து சென்னையில் நாளை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்றார் போல் தங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.