சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன்  உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சேலம் அழகாபுரம் பகுதியில் ஸ்வீட் கார்ன் ஏற்றுமதி செய்துவருபவர் சரவணன். இவருடைய மனைவி சங்கீதா மற்றும் 20 பெண்கள் ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சுப்பிரமணிக்கு சொந்தமான வேனில் ஏற்காட்டிற்கு புறப்பட்டனர். வேனை, அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். நேற்று முழுவதும்  ஏற்காடு மலையில் பொழுதை கழித்துவிட்டு,  இரவில் சேலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்ததனர். அப்போது, மலைப் பாதையில் 60 அடி பாலம் அருகில் சென்றபோது வேன் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்தது.  இதையடுத்து, வேனை சாலையோரத்தில் இருந்த மரம் மற்றும் பாறை மீது இடித்து நிறுத்த வேன் டிரைவர் முயற்சித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்தது.

இந்த விபத்தால் வேனில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.  வேனில் பயணித்த பெண் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்த காவல் துறையினா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.