மைசூர்:
மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு பிறகு கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி மைசூர், உலகப் புகழ் பெற்ற தசரா பண்டிகை துவங்க இருப்பதால் மைசூரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மைசூர் மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டு இருக்கும் தருணத்தில் உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகள்படி ஓடியார் அரண்மனையிலும் பார்வையாளர்கள் யாரும் நுழையக்கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்ப்பதற்காகவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

மைசூரு அரண்மனை, ஜெயச்சமராஜேந்திரா கலைக்கூடம், ஸ்ரீசமராஜேந்திர விலங்கியல் தோட்டம், சாமுண்டி மலை மேல் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவில் ஆகியவை மைசூரில் முக்கியமான சுற்றுலா தலங்களாக கருதப்படுகிறது.

தசரா பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதிலுமிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சுற்றுலாத் தலங்களுக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருந்தது, ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.