சென்னை: தமிழகத்தில் இன்று 9446 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 166 மையங்களிலும் ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் மொத்தம் 16,600 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிலையில் 3ம் நாளான இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 9446 என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 25,908 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இன்று மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசியை 9,305 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை 141 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.