மாணவிகள் நிசா, அஸ்மா

தேனி:

பெரியகுளத்தில் செயல்படும் இஸ்லாமிய மதரசா பள்ளியில் ஊழியர்கள் சித்திரவதை செய்வதாக மாணவிகள் இருவர் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இஸ்லாமிய மதரசா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு கோவை மற்றும் கடலூரைச் சேர்ந்த  நிசா, அஸ்மா ஆகிய மாணவிகள் படித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று வடக்குப்பட்டி பகுதிக்கு, வந்த அவர்கள்,  பொது மக்களிடம் தஞ்சமடைந்தனர். மதரசா இஸ்லாமிய பள்ளியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தங்களை அங்குள்ள ஊழியர்கள் சித்திரவதை செய்வதாகவும் கதறினர்.

பொதுமக்கள் போராட்டம்

இதையடுத்து பொதுமக்கள் அந்த மாணவிகளுக்கு ஆறுதல் கூறி, பெற்றோரிடம் தொடர்புகொள்ளும்படி கூறினர். அப்போது, மாணவிகளைத் துரத்தியபடி இரு சக்கர வாகனத்தில் மதரசா ஊழியர்கள் மூவர் வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த மூவரையும் பிடிக்க முயன்றனர். ஒருவர் தப்பிவிட்ட நிலையில் இருவரைப் பிடித்துவைத்தனர்.

மதரசா ஊழியர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

இதன் பிறகு விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மதசரசா பள்ளி நிர்வாகிகளை கைது செய்தனர். இதை எதிர்த்து மதரசா பள்ளி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.