கோலாலம்பூர், ஆகஸ்டு 6- இனவாத விருது விழாவைப் புறக்கணித்த நடிகரும் இயக்குனருமான அஃப்ட்லின் ஷவ்கியின் செயலைப் பாராட்டியுள்ளார் ஏர் ஆசியாவின் நிறுவனரும், மூத்த செயல்முறை அதிகாரி டான் ஶ்ரீ டோனி பெர்னான்டஸ்.
airasia langkawi012
மலேசியத் திரைப்பட விழாவில் இனவெறி நிலவுவதாகக் கூறி சர்ச்சை எழுந்துள்ளது. மலேசிய திரைப்பட விழாவில், பரிசு பெற  பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களில்  70 விழுக்காடு மலாய் மொழி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென அடிப்படை விதிமுறையை மலேசிய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

தேசிய மொழியான மலாய் மொழியை அங்கீகரிக்கும் வகையில் இந்த அடிப்படை விதிமுறை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதர  திரைப்படங்கள் மலாய் மொழி அல்லாத பிரிவில் இணைத்துக்கொள்ளப்படும்” எனவும் மலேசியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான பஞ்சாட்சரம் நல்லையா தெரிவித்தார். இதனைக் கண்டித்து இயக்குநர் அஃப்ட்லின் ஷவ்கி மற்றும் முகமட் நோர் காசிம் ஆகியோர் இந்த விழாவினை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர் (படிக்க).
ஏர் ஆசியா விமான நிறுவனர்  ஶ்ரீ டோனி பெர்னான்டஸ்:
நாட்டின் பிரபல இயக்குனரும் நடிகரும் பாடகருமான அஃப்ட்லின் ஷவ்கி விழாவினைப் புறக்கணிப்பதாக அறிவித்ததை பாராட்டி  ஶ்ரீ டோனி பெர்னான்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்   “அஃப்ட்லின் ஷவ்கியின் நிலைப்பாட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். திரைத்துரையில்  ஒருவர் தனது  உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, பன்மொழிகளில் எடுக்கப்படும் படங்களை மொழியைக் காரணம் காட்டி விருதில் இருந்து விலக்கி வைக்கப்படக் கூடாது என கருதுகிறேன்.
உலகின் சிறந்த விமானமாக ஏர் ஆசியா விருதுகள் பெற்றதற்கு முக்கியக் காரணம் அதன் பன்முகத்தன்மை தான். பன்முகத்தன்மையைப் பாராட்டும் நேரமிது, பிரிவினைக்கான காரணங்களைத் தேடுதல் கூடாது. நான் டின்னை இசைத் துறையில் தான் சந்தித்தேன். நாங்கள் எங்கள் இனத்தைப் பார்க்கவில்லை. அசிஸ் டத்தோ பஹாமின் மற்றும் கோனோர் மாக்கர்தி ஆகியோருடன் இணைந்து ஓர் அதிசயத்தை உருவாக்கினோம். அதுதான் ஏர் ஆசியா. அது பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
நான் மீண்டும் சொல்கிறேன். பிரிவினைகள் போதும், ஒற்றுமையைப் பெருக்குவோம். பன்முகத்தன்மையைப் பாராட்டுவோம்” எனக் கூறியுள்ளார்.

சிஐஎம்பி வங்கியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் நஜீர் ரசாக்:
டோனி பெர்னான்டஸ் போலவே, டத்தோ ஶ்ரீ முகமட் நஜீர் ரசாக்கும்  அஃப்ட்லின் ஷவ்கியின் செயலைப் பாராட்டியுள்ளார்.

“எனக்கு மிகவும் பிடித்த ஓலா போலா போன்ற திரைப்படங்கள் சிறந்த மலேசிய படங்கள் விருது பிரிவில் போட்டியிட முடியாததை அறிந்து மிகவும்  அதிர்ச்சியடைந்தேன். ஏன் இந்தப் பாகுபாடு? அஃப்ட்லின் போன்ற தனிநபர்களின் நிலைப்பாடே மாற்றத்தைக் கொண்டு வர முடியும். வாழ்த்துகள்” எனத் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
ஜகாட், ஒலா போலா போன்ற படங்கள் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் போன்ற பிரிவுகளில் ‘மலாய்மொழி அல்லாத’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்டதைக் கண்டித்து மேலும் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி: 1