விழுப்புரம்

பெண்கள் கையில் நாளைய நீதித்துறை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கூறி உள்ளார்.

நேற்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியருக்குப் பட்டமளிப்பு விழா நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் நடந்த இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கயல்விழி வரவேற்றார்.    விழாவில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார், சட்டத்துறை அரசு செயலர் கார்த்திகேயன்,  சட்டக்கல்வி இயக்குநர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தலைமை வகித்த உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் மாணவ மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கினார்.   அவர் தனது உரையில், “ இளம் வழக்கறிஞர்கள் தன்னம்பிக்கை மற்றும் தெளிந்த சிந்தனை கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு வழக்கை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் சட்டத்தை நன்றாக அறிந்து தொழிலில் முன்னேறக் கடினமாக உழைக்க வேண்டும்.

தமிழகம் மட்டுமே  பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு உள்ள ஒரே மாநிலம் ஆகும்.  வேறு மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு இருந்தாலும் தமிழகத்தில் தான் 30 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறது. இங்கு இளம்பெண் வழக்கறிஞர்களுக்காக சில துறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் வழக்கறிஞர்கள் நீதிபதி ஆகும் கனவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள 14 சட்டக் கல்லூரிகளில் ஒன்பது கல்லூரிகளில் பெண் முதல்வர்கள் உள்ளனர். பெண்கள் கையில் நாளைய நீதித் துறை  உள்ளது. நீதித்துறையும் வழக்கின் தன்மையும் நிச்சயம் சமுதாய மாற்றம் ஏற்படும்போது தானாகவே மாறும்” எனக் கூறி உள்ளார்.