சென்னை:

நாளை திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு நடைபெற உள்ளதால், கட்சி தலைவர் கமலஹாசன் இன்று  மதியம எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலில் திருச்சி புறப்பட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது  மாநாடு திருச்சி பொன்மலை பகுதியில் நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1.30 மணி அளவில கிளம்பிய  வைகை விரைவு ரயிலில் கமலஹாசன் பயணம் செய்கிறார்.

ஏற்கனவே இந்த ரயில் பயணத்தின்போது, இடையில் உள்ள ரயில் நிலையங்களில் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதற்கு ரயில்வே அனுமதி மறுத்துள்ள நிலையில், அதை ரத்து செய்வதாகவும், திருச்சி பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ளும்படி வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கி உள்ள  நடிகர் கமல்ஹாசன்,  மதுரையில் முதல் கூட்டத்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து,  திருச்சியில் ஏப்.4ம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில்  நாளை (புதன்கிழமை )மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.