சென்னை:

காவிரி பிரச்சினைக்காக மத்திய அரசை எதிர்த்து, அதிமுக உண்ணாவிரதம் இருப்பது கபட நாடம் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு அடிமையாக ஆட்சியாளர்கள் இருக்கிறார் என்று கூறினார்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் கடந்த 3 நாட்களாக மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதுபோல அதிமுக சார்பில், இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சாலை மறியல் செய்து  கைதான மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் உள்பட கட்சி நிர்வாகிகளை  சந்தித்த  ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழக  அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கூட தமிழக ஆட்சியாளர்களுக்கு தைரியமில்லை என்று குற்றம் சாட்டியவர், ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

குதிரை பேர தமிழக அரசு  மத்திய அரசுக்கு முறையாக அழுத்தம் கொடுக்காததால் தான்,  நாங்கள் போராடு கிறோம் என்று கூறிய ஸ்டாலின்,  மத்திய அரசுக்கு முறையாக நெருக்கடி கொடுக்காமல், இன்று உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் கபட நாடகம் என ஸ்டாலின் விமர்சித்தார்.